ராஜீவ்காந்தி கொலை வழக்கில், தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருந்த கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன என்று செய்திகள் வெளியாகி உள்ளன. உலகெங்கும் உள்ள தமிழர்களின் நெஞ்சங்களில் நெருப்பை அள்ளிக் கொட்டுவதாக இது அமைந்துள்ளது.

பேரறிவாளன் உள்ளிட்ட மூவரும் கடந்த 21 ஆண்டுகளாகச் சிறையில் வாடி வருகின்றனர். பொதுவாக, வாழ்நாள்(ஆயுள்) தண்டனை என்பது இருபது ஆண்டுகள் என்று கொள்ளப்பட்டு, நன்னடத்தையின் அடிப்படையில் 14 ஆண்டுகளில் விடுதலை செய்யப்படுவது மரபாக இருந்து வருகின்றது. அண்டை மாநிலங்கள் சிலவற்றில் 7,8 ஆண்டுகளிலேயே வெளிவந்து விடுகின்றனர். இவர்களோ 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே சிறையில் இருப்பதால், ஒரு வாழ்நாள் தண்டனையை அனுபவித்து முடித்து விட்டனர். இப்போது அவர்களுக்கு மரண தண்டனையும் வழங்குவதென்பது, இயற்றை நீதிக்கு முற்றிலும் புறம்பானது. ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில், இரண்டு தண்டனைகளை வழங்குவது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது. இன்னொரு சட்டச் சிக்கலையும், குடியரசுத் தலைவர் கணக்கில் கொள்ள வேண்டும். ராஜீவ் கொலை வழக்குத் தொடர்பாக அமைக்கப்பட்ட ஜெயின் கமி­ன், புலன் விசாரணையை மேலும் பல கோணங்களில் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது. அதற்காக அமைக்கப்பட்ட சி.பி.ஐ. குழு இன்று வரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. சந்திராசாமி, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோரின் மீதான குற்றச்சாட்டுகள் முழுமையாக விசாரிக்கப்படவில்லை. கூடுதல் புலன் விசாரணைகளில், மேலும் பல உண்மைகள் வெளிப்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு மரண தண்டனையை நிறைவேற்றுவது, உண்மைக் குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளவும், நிரபராதிகள் தண்டிக்கப்படவுமான நிலைக்கு வழி வகுத்துவிடும்.

இந்நிலையில், உலகெங்கும உள்ள தமிழர்களும், மனிதநேயமிக்க மனிதர்களும் திரண்டெழுந்து, இக்கொடுமை நிறைவேறி விடாமல் தடுக்க வேண்டிய கடமையில் உள்ளனர். இது தொடர்பாக, முதல் முயற்சியாக, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியனும், பேரவையின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் அனைவரும் 12.08.2011 அன்று இந்தியக் குடியரசுத் தலைவருக்கு, கீழ்க்காணும் வகையில் தொலைவரிகளை(தந்திகளை) அனுப்பியுள்ளனர். ” We, on behalf of all Tamils, all over the world, request yout Excellency to mercifully intervene and annul the death penalty of Perarivalan, Murugan and Santhan, who have been convicted in Rajiv Gandhi assasination case”

குடியரசுத் தலைவருக்குக் கோடிக்கணக்கில் குவியட்டும் தொலைவரிகள்!

மரண தண்டçயை ஒழிப்போம்! மனித நேயம் காப்போம்!