ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு கருணை காட்டி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யும் தீர்மானத்தை தமிழக சட்டப் பேரவையில் தானே முன்மொழிந்து, அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் பெற்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, அந்த மூன்று பேரின் குடும்பத்தினரின் வாழ்வில் மீண்டும் விளக்கேற்றி வைத்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தும், இவர்கள் மூன்று பேரின் மரண தண்டனையை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வேலூர் முதல் சென்னை வரை எனது தலைமையில் பரப்புரை நடைபயணம் நடைபெறவுள்ளது.

வேலூர் மத்திய சிறைக்கு அருகேயிருந்து 6.9.2011 (செவ்வாய் கிழமை) காலை புறப்பட்டு, 5 நாட்களுக்கு இந்த பரப்புரை பயணம் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தனது அறிக்கையில் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை சீமான் சந்தித்தார். மூன்று பேரையும் சந்தித்துவிட்டு வந்த சீமான், தடா.சந்திரசேகர், பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் ஆகியோர் மூன்று உயிர்களை காத்த முதல்வர் அம்மா(ஜெ)வுக்கு நன்றி தெரிவித்து நடைபயணத்தை தொடங்குகிறோம் என்று கூறினர்.

அதன்படி நடைப்பயணம் வேலூர் பெரியார் பூங்காவில் இருந்து தொடங்கியது. தொடங்கிய சிறிது நேரத்தில் 100க்கும் மேற்பட்ட நாம் தமிழர் இயக்கத்தினருடன் சீமான், அற்புதம்மாள், தடா.சந்திரசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் திருமணம் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

பின்னர் மாலை 6.30 மணி அளவில் நடைப்பயணம் செல்லக் கூடாது என கட்டுப்பாடு விதித்து, அவர்களை போலீசார் விடுதலை செய்தனர். திருமண மண்பத்தில் இருந்து வெளியே வந்தவர்கள் ஆர்க்காட்டில் நடக்கும் அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற காரில் சென்றனர்.

நன்றி: நக்கீரன்