இலங்கையின் கம்யூனிஸ கட்சியின் சிரேஸ்ட தலைவரும் அரசாங்க அமைச்சருமான டியு குணசேகர, இந்திய கம்யூனிஸ கட்சியின் தலைவர்களை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு நேற்று புதுடில்லியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸக்கட்சியின் தலைவர்களான டி ராஜா, எஸ்.சுதாஹர் ரெட்டி ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

இந்திய இலங்கை உறவுக் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

போருக்கு பின்னர் இலங்கையில் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு நல்லிணக்கத்துடன் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

இதன்போது 13 வது திருத்தச்சட்டத்தின் கீழ் இலங்கை அரசாங்கம் முன்னெடுப்புகளை மேற்கொள்ள இலங்கையின் கம்யூனிஸக்கட்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ராஜா குறிப்பிட்டார்.

இலங்கை படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் அத்துடன் இரண்டு வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்த மக்களை முகாம்களுக்குள் வைத்திருந்தமை போன்றவை தொடர்பிலும் தாம் இலங்கையின் கம்யூனிஸக்கட்சியின் சிரேஸ்ட தலைவரிடம் கேள்வி எழுப்பியதாக ராஜா கூறினார்.