Home / featured / பரமக்குடி துப்பாக்கிச் சூடு – தமிழகமெங்கும் செப் 16இல் த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

பரமக்குடி துப்பாக்கிச் சூடு – தமிழகமெங்கும் செப் 16இல் த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

11.09.2011 அன்று பரமக்குடியிலும் மதுரை சிந்தாமணியிலும் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தாமலேயே நிலைமையைச் சமாளித்து இருக்க முடியும். அன்று அங்கு நடந்த விவரங்கள் குறித்து கூடுதல் செய்திகள் வந்து கொண்டுள்ளன. பரமக்குடி ஐந்து முனை சாலைப் பகுதியில் சற்றொப்ப 250 பேர்கள் மட்டுமே சாலை மறியல் நடத்தியுள்ளனர். முதலமைச்சர் சொல்வது போல் அவர்கள் எண்ணிக்கை 500ஆக இருந்தாலும்கூட அங்கிருந்த காவல் துறையினரின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது இது பெரும் கூட்டமல்ல. காவல் துறையினரைத் தாக்கினர், காவல் வாகனத்துக்குத் தீ வைத்தனர் என்ற காரணங்கள் அட்டவணை வகுப்பு மக்கள் ஆறு பேரைச் சுட்டுக்கொன்றதை ஞாயப்படுத்திவிடாது.

தியாகி இம்மானுவேல் சமாதிக்கு திறந்த சரக்குந்துகளில் சென்றவர்கள் மீது மதுரை சிந்தாமணி பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி படுகாயப்படுத்தியிருப்பதை ஞாயப்படுத்த முதலமைச்சருக்கு எந்தப் போலிக்காரணமும் கிடைக்கவில்லை.

மேற்கண்ட நிகழ்வுகளிலிருந்து தெரிய வரும் செய்தி என்னவென்றால் தமிழக முதலமைச்சர் செயலலிதா, காவல்துறை தன் மன உணர்வுக்கேற்ப அட்டூழியம் புரியவும் மனித உயிர்களை மலிவாகப் பலி வாங்கவும் அனுமதிக்கிறார் என்பதே ஆகும். ஏனெனில் சட்டப் பேரவையில் காவல்துறையினரின் அத்துமீறல்களை முழுமையாக ஞாயப்படுத்தியே முதலமைச்சர் பேசியுள்ளார். அத்துடன் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை அமைக்க அவர் ஒப்புக் கொண்டுள்ளதும் ஒரு கண்துடைப்பு நடவடிக்கையே.

திரு. ஜான்பாண்டியன் அவர்களை வழியில் தடுத்துக் கைது செய்திருக்க வேண்டிய தேவையே இல்லை. உரிய சட்டம் ஒழுங்கு ஏற்பாடுகளைச் சரியாகச் செய்திருந்தால் அதுவே போதுமானதாக இருந்திருக்கும். விடுவிக்கப்பெற்ற ஜான்பாண்டியன் பரமக்குடி சாலை மறியலில் தன்கட்சிக்கு அப்பாற்பட்ட சமூக விரோதிகள் கலந்துகொண்டதாகக் கூறியுள்ளார். அங்கு சாலை மறியலின்போது நடந்த மற்ற நிகழ்வுகளை அவர் கண்டித்துள்ளார். முதலமைச்சரைப் பார்த்து உண்மை நிலைகளை விளக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். இவ்வாறான மனநிலையில் உள்ளவரை வழிமறித்துக் கைது செய்து விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு வித்திட்டவர்கள் தமிழகக் காவல்துறையினரே.

மேலும் இந்த பரமக்குடி, மதுரை நிகழ்வுகள் சாதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலால் நடந்தவை அல்ல. ஆதிக்க மன உணர்வுடன் காவல்துறை ஒடுக்கப்பட்ட மக்களோடு மோதியதால் ஏற்பட்ட உயிரிழப்புகள், மற்றும் படுகாயங்கள். குற்றமிழைத்த காவல்துறையினரை காப்பாற்ற இது சாதி மோதல் தான் என்று நிலைநாட்ட முயல்கிறார் முதலமைச்சர் செயலலிதா.

09.09.2011 அன்று கமுதி மண்டலமாணிக்கம் பச்சேரி கிராமத்தைச் சார்ந்த அட்டவணை வகுப்பு மாணவர் பழனிகுமார் ஆதிக்க சக்திகளால் படுகொலை செய்யப்பட்டதை 11.09.2011 துப்பாக்கிச்சூட்டோடு இணைத்துப் பேசுகிறார். இது சாதி மோதலைத் தூண்டிவிடத்தான் உதவுமே தவிர நிலைமையை அமைதிப்படுத்த உதவாது.

ஆறுபேரைச் சுட்டுக் கொன்று இருவரைச் சுட்டுப் படுகாயப்படுத்திய காவல்துறையை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. காவல் துறையினரின் அத்துமீறல்களை ஞாயப்படுத்த முதலமைச்சர் முயலுவதையும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டிக்கிறது.

நடந்து முடிந்துள்ள சனநாயக விரோத மற்றும் மனித உரிமைப் பறிப்பு நிகழ்வுகளுக்குத் தீர்வு காண பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக முதலமைச்சரை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வலியுறுத்துகிறது.

1. பரமக்குடி மற்றும் மதுரை துப்பாக்கிச் சூடுகளுக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்து அவர்களை உடனடியாக இடைநீக்கம் செய்து கைது செய்யவேண்டும்.

2. பணியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும்

3. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் வழங்க வேண்டும். படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாய் வழங்கவேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி 16.09.2011 அன்று தமிழகத்தின் பல பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழமையுடன்,
பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

About பெரியார்தளம்

Check Also

DeathSentence_PTI

உலகம் முழுதும் கடந்த ஆண்டில் மரண தண்டனைக்கு உள்ளானோர் 607 பேர்

உலகில் முழுமையாக மரணதண்டனையை நீக்கம் செய்துள்ள நாடுகளின் எண்ணிக்கை (ஜூன் மாத நிலவரம்) 101; கடந்த ஆண்டு உலகம் முழுதும் ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>