பொன் இராமச்சந்திரன் என்ற பெரியார் பற்றாளர், பெரியார் திராவிடர் கழகத் தலைவருக்கு எழுதிய கடிதம் இது:
பேரன்பிற்குரிய பெரியார் திராவிடர் கழகத் தலைவர் அவர்களுக்கு வணக்கம்.

தங்கள் கழகத்தின் பகுத்தறிவுப் பரப்புரை பணிகளைக் கண்டு பெரிதும் மகிழ்கிறேன். பாராட்டுகிறேன். பகுத்தறிவாளர்களின் கூட்டங்கள் அரங்கங்களின் அடைபட்டுப் போன அவலமான நிலையில் பெரியார் திராவிடர் கழகக் கூட்டங்கள் வீதிகளில் நடப்பது போற்றத்தக்கது. மக்களிடம் பகுத்தறிவு கருத்துக்கள் சென்றடைய வீதிக் கூட்டங்களே பயன்படும்.

நம்மவர்களின் ஊடகங்கள் – நாள், கிழமை, திங்களிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள் – எல்லாம் வெட்கமில்லாமலும், வெட்கத்துடனும் பார்ப்பனர்களையும் மிஞ்சி மூடத்தனத்தைப் பரப்புகின்றன. காரணம், இனப்பற்று, நாட்டுப் பற்று, மொழிப் பற்றுகளைவிட பணப்பற்று மிகுந்து விட்டது. என்ன செய்வது? பெரும் பொருளும், மனவலிவும், துணிவும், சலியாத உழைப்பும் மிக்க இன்னொரு பெரியார் எப்போது வருவார் என மனம் ஏங்குகிறது.

உங்களைப் போன்றவர்களின் மனத் துணிவும், இனமொழி நாட்டுப் பற்றும், பகுத்தறிவுப் பணியும் தான் நம் தமிழர்களைக் காப்பாற்றும். தொடர்ந்து தொண்டாற்ற பொருள் வளம் வேண்டும். என்னால் இயன்ற அணு அளவான ரூ.2000 (ரூபாய் இரண்டாயிரம் மட்டும்) பெரியார் திராவிடர் கழகத்திற்கு அளிப்பதில் மகிழ்கிறேன். தங்களின் தொண்டு தொடர விழைகின்றேன்.

- பொன். இராமச்சந்திரன், ‘அருளகம்’, 5, 2ஆம் தெரு, ஈசுவரன் நகர், பம்மல், சென்னை-75.

கோவக்குளத்தில் கழகக் கூட்டம்

டிசம்பர் 24, பெரியார் நினைவு அன்று கிருட்டிணராயபுரத்தில் கேரள அரசைக் கண்டித்தும், மத்திய அரசின் துரோகத்தைக் கண்டித்தும் முழு அடைப்பு நடத்தப்பட்டது. காலை 10 மணிக்கு பேருந்து நிலையத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்பு கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் உருவ பொம்மையை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் எரித்தனர். அன்று மாலை 6 மணிக்கு கோவக்குளம் கிராமத்தில் பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம் கரூர் மாவட்ட செயலாளர் இரா. காமராசு தலைமையில் நடைபெற்றது. மந்திரமா, தந்திரமா நிகழ்ச்சியை பெரம்பலூர் தாமோதரன் நடத்தினார். மேட்டூர் குமாரசாமி மாவட்ட தலைவர் கு.கி.தனபால் உரையாற்றினார். கழகத் தோழர்கள் சிரிகாந், ஊழியன், மாணிக்கம், பன்னீர், மலைகெழுந்தன், முத்து ஆகியோர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.