பெரியார் திராவிடர் கழகம் கடந்த 14.04.12 அன்று பரமக்குடியில் போராளி இமானுவேல் சேகரன் நினைவிடத்திலிருந்து “திராவிடர் இயக்க நூற்றாண்டில் ஜா’தீ’ய வாழ்வியல் எதிர்ப்புப் பரப்புரைப் பயணத்தைத் தொடங்கியது. பயணம் கடந்த 16.04.12 அன்று செக்கானூரணி, சோழவந்தான் வழியாக உசிலம்பட்டியை அடைந்தது.

இரவு 7 மணிக்கு உசிலம்பட்டி தேவர் சிலை அருகே பசும்பொன் தேவர் வேன் ஸ்ட்ண்டு எதிரே பிரச்சாரம் தொடங்கியது. பயணத்தின் நோக்கத்தை விளக்கி தோழர் சிவகங்கை முத்து உரையாற்றினார். தொடர்ந்து மேட்டுர் முத்துக்குமார் ஜாதி ஒழிப்புப் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார். பரபரப்பாக பெரியார், அம்பேத்கர் புத்தகங்கள் விற்பனை ஆகிக்கொண்டிருந்தன. சில தோழர்கள் துண்டறிக்கை விநியோகிக்கவும், கடைவீதியில் நிதி திரட்டிக்கொண்டும் இருந்தனர்.

அப்போது சிலர் இரண்டு முன்று முறை கூட்டத்தின் அருகே வந்து நீங்கள் என்ன இமானுவேல் சேகரன் ஆட்களா? ( ஜாதியா?) எனக் கேட்டுக் கேட்டுச் சென்றனர். மேலும் சிலர் துண்டறிக்கையில் இமானுவேல் சேகரன் பெயரைப் பார்த்த உடனே மின்சாரத்தால் தாக்கப்பட்டவர்கள் போல உடனடியாக துண்டறிக்கையைத் திருப்பித் தந்தனர்.

அப்போது பிரச்சார வாகனத்தைச் சுற்றி ஏராளமாக பொதுமக்களும் கூடி இருந்தனர். திடீரென கூட்டத்தை நோக்கி படுவேகமாக கற்கள் வீசப்பட்டன. பொதுமக்களுக்கு முன்பாக நின்றிருந்த தோழர்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இதில் பிரச்சாரக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும், உசிலம்பட்டியைச் சேர்ந்தவருமான தோழர் இராவணன் கடுமையான காயமடைந்தார். அவரது கையின் மணிக்கட்டில் எலும்பு உடைந்தது. வலியால் துடித்த அவரை உடனடியாகத் தோழர்கள் பிரச்சார வாகனத்திற்குள் அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கையில் கட்டுப்போட்ப்பட்டது.

இதுபோன்ற சூழல்களுக்காக கருப்புச்சீருடை அணியாமல் வந்திருந்த தோழர்கள் உடனடியாக கற்கள் வந்த திசை நோக்கி ஓடிப் பார்த்தும் யாரும் சிக்கவில்லை. காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது. உடனடியாகக் கூட்டத்தை நிறுத்திவிடுங்கள் என காவல்துறை வேண்டுகோள் விடுத்தது. இருப்பினும் அவசியம் நாங்கள் பேச வந்ததைப் பேசியே செல்வோம். இடையில் பேரப்புரையை நிறுத்த மாட்டோம் என தோழர்கள் உறுதியேற்று பரப்புரையைத் தொடர்ந்தனர். துண்டறிக்கை விநியோகம், நிதிதிரட்டல் என பிரிந்திருந்த தோழர்கள் உடனடியாக வாகனத்தின் அருகில் வரவழைக்கப்பட்டனர். என்ன நடந்தாலும் ஜாதிய வாழ்வியலுக்கு எதிரான பரப்புரையை நடத்தாமல் செல்லக்கூடாது என உறுதியும் நின்று திட்டமிட்டபடி கூட்டத்தை நடத்திவிட்டு அடுத்த ஊரான பெரியகுளத்திற்கு பரப்புரைக்குழு பயணத்தைத் தொடர்ந்தது.

கல்வீச்சில் காயமடைந்த தோழரைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணியும், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனும் உடனடியாகத் தொடர்பு கொண்டு பேசினர். அவரை உசிலம்பட்டியோடு பயணத்தை முடித்துக்கொண்டு காயம் ஆறும் வரை திண்டுக்கல்லில் ஓய்வெடுங்கள் என அறிவுறுத்தினர். ஆனால் ஜாதி ஆதிக்கச் சிந்தனையாளர்களால் காயமடைந்த தோழரும், மிரட்டப்பட்ட பிரச்சாரக் குழுவினரும் எவ்விதச் சோர்வும், அச்சமும் இன்றி பயணத்தைத் தொடருகின்றனர். இன்று பயணக்குழு திண்டுக்கல்லில் சின்னாளப்பட்டி, கோபால்பட்டி, நத்தம் ஆகிய பகுதிகளில் பரப்புரையை நடத்திக்கொண்டிருக்கிறது. நாளை திருச்சி மாவட்டம். ஏப்ரல் 29 ஆம் நாள் திருப்பூரில் ஜாதிய வாழ்வியலுக்கு எதிராக கடுமையான போராட்டம் ஒன்றை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிவிக்க உள்ளார். நமது எதிர்வினைகளைப் போராட்டத்தில் காட்டுவோம்.

செய்தி & படங்கள்: தோழர் தாமரைக்கண்ணன்