Home / featured / பெரியார் தமிழர் பகைவரா? – விகடன்

பெரியார் தமிழர் பகைவரா? – விகடன்

தமிழர்களுக்காகப் போராடுவதாகச் சொல்பவர்கள் சமீப காலமாக, பெரியாரைப் புறக்கணிப்பதும் எதிரியாகச் சித்திரிப்பதும் தொடர் கிறது. இந்தப்பட்டியலில் புதுவரவு, சீமான் நடத்தும் ‘நாம்தமிழர் கட்சி’. கோவையில் கடந்த 18-ம் தேதி அந்தக் கட்சி வெளியிட்ட கொள்கை ஆவணத்தின் சில பகுதிகள் பெரியாருக்கு எதிரானவை. ‘பெரியார் படத்தை இனி நாம் பயன்படுத்தக் கூடாது’ என்ற அளவுக்கு தீவிரம். இதற்கு, பெரியாருடன் நெருங்கிப் பழகியவரும் மார்க்ஸியப் பெரியாரிய பொதுஉடமைக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளருமான பெரியவர் வே.ஆனைமுத்துவின் பதில் என்ன?

”நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணத்தில் ‘1938-ல் சென்னை மாகாண முதல்வரான ராஜாஜி, பாடத் திட்டத்தில் இந்தியைப் புகுத்தினார். அதை எதிர்த்து நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகள் ஆகியோரின் தலைமையில் தமிழ்நாடு தமிழருக்கே என்று தமிழர்கள் திரண்டனர். அந்நேரத்தில் அவர்களை ஆதரிப்பதுபோல வந்த பெரியார், தமிழர்களை அடிமைப்படுத்தும் திட்டத்தின்கீழ் திராவிட நாடு முழக் கத்தை முன்னெடுத்தார்..’ என்று கூறப்பட்​​டுள்ளது. அதுகுறித்த உங்களது விளக்கம் என்ன..?”

”வரலாற்றை ஒழுங்காகப் படிக்கா​தவர் கூற்று இது! இந்தியாவில் அன்று இருந்த ஒன்பது மாகாணங்களில் காங்கிரஸ் ஆட்சி நடந்தன. அதில் வங்காளம், பஞ்சாப், குஜராத், சென்னை போன்ற பெரும்பான்மையான மாகாணங்களில் இந்தி பேசுபவர்கள் இல்லை. அந்த மாகாணங்களில் ஆட்சி செய்பவர்கள் யாரும் இந்தியைப் புகுத்த நினைக்காத​போது ராஜாஜி மட்டும் சென்னை மாகாணத்தில் இந்தியைப் பாடத் திட்டத்தில் புகுத்தினார். தமிழ் அறிஞர்கள் அதை எதிர்த்தனர். அன்று இந்தியை எதிர்த்தவர்களைக் கருத்து ரீதியாக எதிர்த்தவர்கள், களப்பணி ஆற்றியவர்கள் என இரண்டாகப் பார்க்க வேண்டும். ஈழத்து சிவானந்த அடிகள்தான் ராஜாஜியின் அறிவிப்பை எதிர்த்து முதலில் அறிக்கை வெளியிட்டவர். திருச்சி தி.பொ. வேதாசலம், கி.ஆ.பெ. விசுவநாதம், சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகள் என்று பலரும் இந்தியை எதிர்த்து எழுதினர். அவர்களைக்கொண்டு அப்போது திருச்சியில் நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்பு மாநாட்டுக்குத் தலைமை தாங்கியவர் பெரியார். அதாவது களப்பணி ஆற்றியவர் பெரியார்.

அதைத்தொடர்ந்து, இந்தி எதிர்ப்புப் போராட்டம் பெரியார் தலைமையில் தமிழ்நாட்டில் 20 மாதங்கள் நடந்தன. தினமும் இரண்டு பேர் சிறைக்குச் செல்வார்கள். அப்படியாக, 20 மாதங்களில் 1,230 பேர் சிறைக்குச் சென்றனர். பெரியாருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி, பெல்லாரி சிறைச்சாலையில் அடைத்தனர். அண்ணா உள்ளிட்ட பல தலைவர்கள் சிறை சென்றனர். சிறைக்கொடுமையில் இரண்டு தோழர்கள் இறந்துபோனார்கள். மக்கள் மனதில் அது பெரும்கொந்தளிப்பாக இருந்தது. இந்த நேரத்தில் ராஜாஜி, ‘சோற்றுக்கு இல்லாதவர்களும் படிப்பறிவு இல்லாதவர்களும்தான் இந்தியை எதிர்த்துச் சிறைக்குப் போகிறார்கள்’ என்றார். அது, கொந்தளிப்பை மேலும் அதிகமாக்கியது. ஆறு மாதங்களில் சிறையில் இருந்து பெரியார் விடுதலை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து திருச்சி முதல் சென்னை வரை  இந்தி எதிர்ப்புப் பேரணி நடத்தப்பட்டது. சென்னையில் பேரணியை நிறைவுசெய்து பேசிய பெரியார், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழங்கினார்.

அந்தச் சூழலில் நடந்த நீதிக்கட்சிக் கமிட்டிக் கூட்டத்தில் ஆந்திர, கன்னட, ஒரிஸா மற்றும் கேரளத் தலைவர்கள், தமிழ்நாடு தமிழருக்கே என்றால் நாங்கள் எல்லாம் யார் என்று பெரியாரிடம் கேட்டனர். அதன்பிறகே ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்று அறிக்கை வெளியிட்டார். 1940-ல் திருவாரூரில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் தமிழில் ஒரு மணி நேரம் பேசிய பெரியார், தெலுங்கில் அரை மணி நேரம் பேச வேண்டியிருந்தது. அந்த மாநாட்டில் தெலுங்கர்கள் அந்த அளவுக்கு இடம் பெற்றிருந்ததே அதற்குக் காரணம். ஆக, அன்றைய சென்னை மாகாணம் தென்னிந்தியாவை உள்ளடக்கியதாக இருந்ததால், திராவிட நாட்டுக் கொள்கை இயல்பாக எழுந்த ஒன்றே. 40-களில் வெளிவந்த ஜி.டி. நாயுடுவின் ‘இந்தி போர்முரசு’, ம.இளஞ்செழியனின் ‘தமிழன் தொடுத்த போர்’ என்ற நூல்கள், பெரியாரின் இந்தி எதிர்ப்புப் போரை விரிவாக விளக்கும். எனவே, பெரியார்தான் 1938 போராட்டத்தில் களப்பணி ஆற்றியவர்!”

”தமிழை அறிவியல் அற்ற மொழி. அதை தமிழர் வாழ்வியலில் இருந்து தலை முழுகிவிடுவதே அறிவுடமை.. எனப் பெரியார் கூறியதையும் அந்தக் கொள்கை ஆவணத்தில் கண்டித்திருக்கிறார்கள். பெரியார் ஏன் அவ்வாறு கூறினார்?”

”தமிழில் அறிவியல் கலைச்சொற்கள் குறைவாக இருப்பதைத்தான் அவர் சொன்னார். ‘சென்றுடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவையும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்று பாரதி பாடினார். ஆனால், தமிழர்கள் அதைச் செய்யவில்லை. அது தமிழர்களின் குறைபாடே அன்றி, தமிழின் குறைபாடு அல்ல. மருத்துவ, பொறியியல், இயற்பியல், வேதியியல் நூல்கள் தமிழில் இன்னமும் வெளியாவது இல்லையே.. அறிவியல் அற்ற மொழி என்று, தமிழை அவர் சொன்னது அந்தப் பொருளில்தான்.

பன்னிருப் பாட்டியல் என்ற யாப்பெருங்கலக்காரிகை நூல் தமிழில் உண்டு. அதில், தமிழில் உள்ள 247 எழுத்துக்களில் எது பிராமண எழுத்து, எது சூத்திர எழுத்து, எது சத்திரிய எழுத்து என்றெல்லாம் உள்ளது. ஆங்கிலத்தில் அவன் என்பதற்கு லீமீ என்று ஒரு வார்த்தை உள்ளது. ஏழை, பணக்காரன்,பெரியவர், சிறியவர், கடவுள் எல்லாவற்றுக்கும் அதுதான். ஆனால் தமிழில் அவன், அவர், அவர்கள் என்று எழுது கிறோம், சொல்கிறோம். ஆக, எழுத்தில் வர்ணபேதம் உள்ளதை, புராணக் கட்டுக்கதைகள் மிகுந்திருப்பதைக் கண்டிப்பதற்காக தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று ஒரு கட்டத்தில் சொன்னார். தமிழ் மொழியின் பெருமையையும் பல சமயங்களில் பேசியிருக்கிறார். தமிழ் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்று பேசினார். நெடிய வாழ்க்கை வாழ்ந்து வெவ்வேறு போராட்டங்களைக் கண்டவர் பெரியார். வெவ்வேறு பிரச்னைகளின்போது அவர் கூறியதில் சில வார்த்தைகளை மட்டும் தனியாகப் பார்த்தால், பெரிய முரண்பாடு இருப்பதுபோலத் தெரியும். நாம் அவர் சொன்ன சூழலையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது அவசியம்.”

”ஈழத் தந்தை செல்வா, பெரியாரிடம் ஆதரவு கேட்டபோது, நானே அடிமை, இன்னொரு அடிமைக்கு உதவுவது எப்படி? எனவும் சிங்களர் களுக்குப் பணிந்து செல்லுமாறு கூறியதாகவும் நாம் தமிழர் அமைப்பு கண்டித்திருக்கிறதே..”

”22.2.72 அன்று செல்வா சென்னைக்கு வந்து பெரியாரைச் சந்தித்துப் பேசினார். ‘ஒரு அடிமை இன்னொரு அடிமைக்காகப் போராட முடியாது. நீங்கள் அங்கு சென்று போராடுங்கள்’ என்றுதான் பெரியார் சொன்னார்… பணிந்து போய்விடுங்கள் என்று சொல்லவில்லை!”

– தமிழ்மகன், படம்: ஜெ.வேங்கடராஜ்

JUNIOR VIKATAN

10-ஜூன் -2012

About பெரியார்தளம்

Check Also

DeathSentence_PTI

உலகம் முழுதும் கடந்த ஆண்டில் மரண தண்டனைக்கு உள்ளானோர் 607 பேர்

உலகில் முழுமையாக மரணதண்டனையை நீக்கம் செய்துள்ள நாடுகளின் எண்ணிக்கை (ஜூன் மாத நிலவரம்) 101; கடந்த ஆண்டு உலகம் முழுதும் ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>